மேற்கு மண்டலத்தில் மட்டும் 1.5 இலட்சம் பெண்கள் பங்கேற்கிறார்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் திமுக, தனது மகளிர் அணி மாநாட்டை நாளை (29.12.2025) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடத்துகிறது.
‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் மேற்கு மண்டலக் கழக நிர்வாக மாவட்டங்களில் இருந்து சுமார் 1.5 இலட்சம் பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி., தலைமையில் மாநாடு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் 3.2 கோடி பெண் வாக்காளர்கள் இருக்கும் நிலையில், அவர்களை நேரடியாக அணுகி கட்சியின் நலத்திட்டங்களை விளக்கும் இந்த மாநாடு, 2026 தேர்தல் வெற்றிக்கான அடித்தளத்தை உறுதிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடத்தப்பட்டது. இதுபோன்ற சந்திப்புகள் அடுத்தடுத்த மண்டலங்களிலும் நடைபெறவிருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, வார்டு மற்றும் தெரு அளவில் வாக்காளர் தொடர்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாநாட்டில், 1.31 கோடி மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், விடியல் பேருந்துத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தோழி விடுதிகள் திட்டம் உள்ளிட்ட மகளிர் நலத்திட்டங்கள் குறித்து விளக்கப்படும்.
இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கான சூழலை அரசு உருவாக்கியுள்ளது என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும் நோக்கில் திமுக அனைத்து அணிகளையும் களத்தில் இறக்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளிலும் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கை உணர்த்தும் வகையில் இந்த மாநாடு அரசியல் நோக்கர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. மகளிர் அணியின் மூலமாக மேற்கு மண்டலத்தில் மட்டும் 1.5 இலட்சம் பெண்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வும் திமுக அமைப்புரீதியாக அசூரப் பலத்துடன் இருப்பதையே காட்டுகிறது. திமுகவின் இந்த அதிரடி முன்னெடுப்பு தேர்தலில் மேற்கு மண்டலம் தன்களுக்கு கைக்கொடுக்கும் என நம்பிய அதிமுகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்
அரசியல் செய்திகள்